தரங்கம்பாடி, மே 15 - நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள கேசவன் பாளையத்தில் கடத்தல் முயற்சியின்போது படுகாயமுற்று உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் 4 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்ய ப்பட்டது.கேசவன் பாளையம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகள்கள் கவியரசி (22), கலையரசி (20) அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் அனுஷ்யா (20) மனோகரன் மகள் சரிதா (24) மற்றும் பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அபிநயா (21) ஆகிய ஐந்து பேரும் பொள்ளாச்சியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த இவர்கள் ஐந்து பேரும் கடந்த மே 6 அன்று இரவு பொள்ளாச்சி செல்வதற்காக கேசவன் பாளையத்திலிருந்து தரங்கம்பாடி பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த காரில் இருந்த நபர்கள், இப்பெண்களை கடத்த முயற்சித்துள்ளனர். அப்போது கார் மோதியதில் கவியரசி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் படுகாயமடைந்த கவியரசி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சரிதா அளித்த புகாரின் பேரில், பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கவியரசி சிகிச்சை பலனின்றி மே 11 அன்று உயிரிழந்தார்.
பெண்களை கடத்தும் முயற்சியில் உயிரிழப்பு
இதையடுத்து மறுநாள் காலை கேசவன்பாளையத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள், காரில் வந்தவர்கள் இளம்பெண்களை கடத்த முயன்றதால் படுகாயமடைந்த கவியரசி உயிரிழந்ததாகக் கூறி பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், டி.எஸ். பிக்கள் வெங்கடேசன், வந்தனா மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது 2 நாட்களில் காரையும், காரில் வந்தவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று கேசவன்பாளையம் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் 4 நாட்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதிகாரிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதனன்று கவியரசியின் உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.