தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி
தஞ்சாவூர், மே 7- தஞ்சை மனோஜிப்பட்டி ஏ.ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(38), இவரது மனைவி கனகா(35), இவர்கள் கேட்டரிங் நிறுவனம் வைத்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் வீட்டின் அருகே வசிக்கும் கொத்தனார் செல்வராஜ் கைது செய்யப் பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில்வெங்கடேசனை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போதுவெங்கடேசன் மனைவி கனகா தடுத்தார். அப்போது அங்கு வந்த காவலர்கள் வெங்கடேசனையும், கனகாவையும் திட்டினர். விசாரணைக்கு பின்னர் மணிகண்டன் கொலை வழக்கில் வெங்கடேசனுக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை காவல்துறையினர் விடுவித்தனர். இருப்பினும் அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெங்கடேசனையும், கனகாவையும் அவதூறாக பேசி வந்தனர். மேலும் வெங்கடேசன் நடத்திவந்த கேட்டரிங் தொழில் முழுமையாக பாதிப்பு அடைந்தது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன், “என் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி தஞ்சை ஆட்சியர் அலுவலகம், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் இரண்டு முறை மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திங்கள் கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், நுழைவுவாயிலில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை காப்பாற்றினர். இது குறித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் சோதனை
சீர்காழி, மே 7-நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் சீர்காழி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் விஜயரங்கன் தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் பகுதியில் இருந்து சீர்காழி நோக்கிச் சென்ற வேன் ஒன்றைநிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது உரிமம் இன்றியும்,உரிய தயாரிப்பு, காலாவதியான தேதி எதுவும் குறிப்பிடாமல் திருப்பத்தூரில் தயாரிக்கப்பட்ட 20 மூட்டைகளில் இருந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இனிப்பு தின்பண்டமான மேங்கோ பார் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சீர்காழியில் முகாமிட்டிருந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சேகர் ஆகியோரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.