திருச்சிராப்பள்ளி, ஏப்.29-திருச்சி திருவெறும்பூரை அடுத்த குவளைக்குடி குடித்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் இந்துமதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் இந்துமதி 400 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்து இருந்தார். திங்களன்று காலை தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்துமதி தேர்ச்சி பெற்று 321 மதிப்பெண் மட்டும் பெற்றிருந்தார்.400 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதிப்பெண் குறைந்ததால் மிகவும் மனமுடைந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.