tamilnadu

திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

24 மணி நேர கேமரா கண்காணிப்பு தேவைப்படுவோருக்கு நவீன புதிய திட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 3-திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431- 2331929 என்ற மற்றும் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு 94981-56300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

திருச்சிராப்பள்ளி, மே,3-திருச்சி உறையூர் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் துரைராஜ்(80) ஓய்வு பெற்ற பெல் ஊழியர். இவர் உடல்நிலை சரியில்லாததால் வியாழனன்று பெல் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றார். பெல் டவுன்சிப் நிறுத்தத்தில் இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் துரைராஜ் பலத்த காயமடைந்தார். அவர் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


திருச்சியில் பேரிடர் விழிப்புணர்வு செயலி அறிமுகம்

திருச்சிராப்பள்ளி, மே 3- டிஎன் ஸ்மார்ட் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மழைமானி அமைக்கப்பட்டுள்ள 25 இடங்களின் மழையளவு, காலநிலை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் மற்றும் செயல்படக் கூடாது ஆகிய விபரங்கள் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆகிய விபரங்களை இச்செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின்கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப் பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விபரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இச்செயலியை TN-SMART  google Play Store  மூலம் பதிவிறக்கம் செய்து பேரிடர் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.