tamilnadu

img

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத் தன்மையை இழந்து விட்டது

கரூர், மே 9-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாளில் ஏதேனும் முறைகேடு நடந்தாலோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ மறுநாளே தேர்தல் நடத்தி விடுவதை கடந்த கால தேர்தல்களில் பார்த்துள் ளோம். ஆனால் இம்முறை 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எந்தவித பதிலும் அனுப்பாத சூழ்நிலையில் திடீரென கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரகசியமாக தேனி தொகுதிக்கு அனுப்பப் படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நடைமுறையில் உள்ளது தான்என தேர்தல் அதிகாரியே கூறுகிறார். ஒரு சாதாரண விஷயம் என்றால் ஏன் ரகசியமாக மேற்கொள்ள வேண்டும். 

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் ஒரு பெண் தாசில்தார் தன்னிச்சையாக சென்று மூன்று மணி நேரம் இருந்து ஆவணங்களையெடுத்து வந்து வெளியில் நகல் எடுத்தது பெரிய பிரச்சனையாகியிருக்கிறது. ஒரு தாசில்தார்உயர் அதிகாரிகளின் உத்தரவு, தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக நிச்சயமாக செயல்பட முடியாது. இதுபோன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கீழ் அதிகாரிகள் சிக்க வைக்கப் படுகிறார்கள். உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.எதிர்கட்சிகள் கூட இன்னென்ன இடங்களில் குறைபாடு நடந்துள்ளது, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என எந்தவித கோரிக்கையும்வைக்காத நிலையில் இப்போது 46 வாக்குச்சாவடிகள் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்தில்இருந்து எந்தவித பதிலும் வராத நிலைஉள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் மீது அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியிருக்கிறது. 

தேர்தல் ஆணையம் எல்லோருக்கும் அப்பாற்பட்டு தனித்து, சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பு.ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியமிகப்பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளது. ஆனால் ஆணையத்தின்செயல்பாடு, அதிகாரிகளின் செயல் பாடு அதன் நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவிக்கும் போது,தேர்தல் ஆணையமும், அதிகாரிகளும் பதில் கூற வேண்டும். பதில் கூறவில்லை. ஆனால் அதற்கு மாறாக தமிழக முதல்வர் கூறுகையில், தாங்கள் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்கட்சிகள் புகார் கூறுகிறார்கள் என்கிறார். இது முதல்வரின் சம்பந்தப்பட விஷயமல்ல. இதற்கு ஏன் அவர் தானாக வந்து பதில் கூற வேண்டும். 

இந்த விவகாரத்தில் முதல்வர் தலையீடுவது, நாங்கள் கூறும்குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஒன்று. அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மாநில அரசு 3 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க முயன்றது. அது நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் நீடடிக்க வாய்ப்பில்லை.மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட போது, ஜெனரேட்டர் இயங்காத காரணத்தினால் 5 பேர் இறந்திருக்கிறார்கள். அரசு மருத்துவ நிர்வாகத்தை சரியான வகையில் இயங்க நடவடிக்கை எடுக்காமல், பொறுப்பற்ற அரசாக செயல்படுகிறது. இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.