சீ்ர்காழி, மே 7-ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாய சங்க சீர்காழி வட்டக் குழு கூட்டம், நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்றது. வட்டத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். வட்டத் துணை செயலாளர் பாக்யராஜ் வரவேற்றார். செயலாளார் நாகையா, பொருளாளர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் சுந்தரலிங்கம், சாமிதுரை முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ராசையன் சிறப்புரையாற்றினார். வட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன் நன்றி கூறினார். கூட்டத்தில், டெல்டா மாவட்டங் களை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் சிதம்பரத்திலிருந்து வேளாங்கண்ணி வரை உள்ளதால்விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு, விளை நிலங்களும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப் பட்டால் 60 கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் வெளியேற்றும் சூழ்நிலை ஏற்படுவதால் இதற்கு கண்டனத்தை தெரிவிப்பது. விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்ற முடிவுசெய்திருப்பதை தமிழக அரசு கைவிடவேண்டும். வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டால் பல போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.