தேனி:
மேகமலை வனப்பகுதியில் மூன்று தலைமுறைகளாகக் குடியிருந்து வரும் விவசாயிகள், பொதுமக்களை வெளியேற்றும் விதமாக கெடுபிடி செய்து வரும் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து விவசாயிகள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் மஞ்சனூத்து, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், ஒட்டுக்கல், நொச்சி ஓடை, குழிக்காடு உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் தக்காளி, கத்தரி, பீன்ஸ் போன்ற விவசாயப் பயிர்களையும், மா உலகு கொட்டை முந்திரிஉள்ளிட்ட வருடாந்திர மரங்களை மானாவரி நிலங்களிலும், காப்பி, ஏலம், மிளகு போன்ற எஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை காரணம் காட்டி தேனி மாவட்டவன உயிரின துணை காப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் மலை கிராமங்களில் உள்ள டீசல் மோட்டார்களை அகற்றுவதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்த தகவலை அறிந்த மலைக்கிராம மக்கள் மஞ்சனூத்து வனத்துறைசோதனைச் சாவடியை முற்றுகை யிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் திங்களன்று விவசாயிகள் சங்கம் சார்பாக 100 க்கு மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, விவசாய சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், வனத்துறையினர் அத்துமீறி விவசாயிகளின் மின் மோட்டார்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறி வனத்துறையின் அராஜக போக்கை கண்டித்து மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் டி.கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் திமுகவினர் மனு அளித்தனர் .
ஆட்சியர் அறை முன் தர்ணா
மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினரை காக்க வைத்த மாவட்ட ஆட்சியர். ஆட்சியர் அறை முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த கண்ணன், மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியில் மண்ணெண்ணெய், உரம், பூச்சி மருந்து களைக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதாகவும், பெண்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப் படுவதாகவும் புகார் தெரிவித்தார்.