விளாத்திகுளம், மே 6 -மே 1 உழைப்பாளர் தினம் மற்றும் மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கத்தின் விளாத்திகுளம் தாலுகா குழு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை பாதுகாக்க கோரி கருத்தரங்கம் நடைபெற்றது.தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தாலுகா செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வீர சுதாகர், கவுசல்யா முன்னிலை வகித்தனர். கருத்தரங்கத்தில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இ.சுரேஷ் கூறியதாவது:தமிழக அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை பாதுகாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கையை காட்டிலும், அரசு பள்ளிகளை பாதுகாக்க மிக மிக குறைவான நடவடிக்கையையே எடுத்து வருகிறது.நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரசு பள்ளிகளை பாதுகாக்க அம்மாநில அரசு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்குகிறது. ஆனால் நம்முடைய தமிழக அரசுஅரசு பள்ளி நடத்த தனியார் என்ஜிஓக்கள் தத்து எடுத்துக்கொள்ள முன் வரலாம் என அறிக்கை வெளியிடுகிறது.இதனை எதிர்த்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பிரச்சார இயக்கம் மே 25-ம் தேதி நடைபெறஉள்ளது. அதன் முன்னோட்டமே தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா குழுசார்பாக நடைபெறும் இக்கருத்தரங்கம்.அநியாய கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீதும், கோடைக்காலத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்துகிற பள்ளிகள் மீதும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தாலுகா குழு நிர்வாகிகள் சிங்கராஜ், வீரபாண்டி, கருப்பசாமி, சண்முகவேல் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.