திருச்சிராப்பள்ளி,செப்.14- திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய நிதி ஒதுக்க வேண்டும். பழுதடைந்த பெரிய வாய்க்கால் குழாய் பாலத்தை கான்கிரீட் பாலமாக மாற்றி கொடுக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் சாக்கடை மற்றும் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுகமணி பேரூராட்சி 2வது வார்டு கிளை மற்றும் பொதுமக்கள் சார்பில் வெள்ளியன்று சிறுகமணி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருக்கும் போரட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைசெயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய செயலாளர் வினோத்மணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோகுல் ஆகியோர் பேசினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் அரங்கநாதன், பெருமாள், வீரப்பன், சிவக்குமார் கலந்து கொண்டனர்.