தரங்கம்பாடி, ஏப்.29-10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாகை மாவட்ட அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர். ரிபா என்ற மாணவி 491 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும், ஆர்த்தி 489 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும், காவியா 487 பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 12 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று அதிக மதிப்பெண் பெற்ற துறையாக விளங்குகிறது. கணிதப் பாடத்தில் இருவர், அறிவியலில் ஒருவர் என 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத் துறை 97, தமிழ்துறை 99 என முதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. தேர்வு எழுதிய 67 மாணவ- மாணவிகளில் 27 பேர் 450-க்கு மேலும் 25 பேர் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 432 ஆகத் திகழ்கிறது. மாணவ- மாணவிகள் உயர்ந்த மதிப்பெண்கள் பெற பயிற்றுவித்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.