tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை, ஏப்.29-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 271 பேரில் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.51 சதவீதம் ஆகும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 670 ஆண், 11 ஆயித்து 601 பெண் என மொத்தம் 23 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினர். இதில், 11 ஆயிரத்து 103 ஆண், 11 ஆயிரத்து 357 பெண் என மொத்தம் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு பெற்ற 96.10 தேர்ச்சி விகிதத்தை விட 0.41 சதவீதம் கூடுதலாகப் பெற்று 96.51 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 7496 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் 7296 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதமானது 97.33 சதவீதம் ஆகும். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9126 பேர் தேர்வு எழுதியதில் 8750 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 95.88 சதவீதம் ஆகும். அதே போல் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 6649 பேர் தேர்வு எழுதியதில் 6414 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 96.47 ஆகும். 

நூறு சதவீத தேர்ச்சி

மாவட்டத்தில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மகளிர் உயர்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரையப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 80 அரசுப் பள்ளிகளும், திருக்கோகர்ணம் ஸ்ரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 163 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கணித பாடத்தில் 14 மாணவர்களும் ,அறிவியல் பாடத்தில் 23 மாணவர்களும் ,சமூக அறிவியல் 69 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் 97.27 சதவீதமும்,ஆங்கில பாடத்தில் 97.99 சதவீதமும்,கணித பாடத்தில் 97.55 சதவீதமும்,அறிவியல் பாடத்தில் 98.78 சதவீதமும்,சமூக அறிவியல் பாடத்தில் 98.12 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.14, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 97.90 ஆகும் .மொத்த தேர்ச்சி சதவீதமானது 96.51 ஆகும். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.மாநில அளவிலான தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டு இருந்த 18ஆவது இடத்தில் இருந்து 12 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.