புதுச்சேரி:
கொரோனா சூழலையொட்டி தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி, காரைக்காலிலும் பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் மதிப்பெண்கள் குறைவால் பலரும் வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. ஜூன் 9-ம் தேதியன்று தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் செவ்வாயன்று மதிப்பெண் பட்டியல் வெளியானது.நடப்பாண்டில் புதுச்சேரி, காரைக்காலில் 16,485 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுவதாக இருந்தனர். அதில் மாணவர்கள் 8,268 பேர். மாணவியர் 8,217 பேர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் புதுச்சேரி பிராந்தியத்தில் 13,876 பேரும், காரைக்கால் பிராந்தியத்தில் 2,609 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதிப்பெண் குறைவால் வருத்தம்
தேர்வு முடிவுகள் குறித்துப் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கேட்டதற்கு, “பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் ஆசிரியர்களால் மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. பல பள்ளிகளிலும் மதிப்பெண்களைக் குறைத்தே வழங்கினார்கள்.பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அப்போதுதான் மாணவ, மாணவியர் படிப்பார்கள் என்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.குறைவாக வழங்கிய காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு தற்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. மிகக்குறைவான மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.