தஞ்சாவூர், ஜூலை.7- தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சனிக்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வாரத்திற்கு ஒரு நாள் லாரி மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுகின்றனர். ஆனால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கடந்த ஒரு வருடமாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பயன்படுத்த முடிய நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி சில தனியார் லாரிகள் ஒரு குடம் 12 முதல் 15 ரூபாய் வரை தண்ணீரை விற்பனை செய்கின்றனர். மூன்று மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடை ந்தனர். இதனால் குடிநீருக்காக மக்கள் தினமும் 4 கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம பெண்கள் மற்றும் பொது மக்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை புதுக்கோட்டை சாலையில் காலிக் குடங்களுடன் திரண்டு குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறை டி.எஸ்.பி சீதாராமன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அதிகாரி(கிராம ஊராட்சி) கந்தசாமி உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் இரண்டு நாளுக்குள் போர்வெல் போட்டு தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும். மேலும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
லாரி சிறைபிடிப்பு
இதற்கிடையே மறியல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தனியார் தண்ணீர் லாரி கிராமத்திற்குள் செல்ல முயன்றது. அப்போது அங்கிருந்த பெண்கள் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாது. எங்களது குடிநீர் பிரச்சனை தீர வேண்டும் என லாரியை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். இதையடுத்து வேறு ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் அந்த லாரியை திருப்பி அனுப்பினர்.