tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை, மே 26-பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது .கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவா்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கோவை மாவட்ட காவல் துறை விசாரித்தால் முழு விவரங்கள் வெளியே வராது என்றும், குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்அளிக்க வரக்கூடாது என்னும் வகையிலும் காவல் துறை செயல்பாடு மற்றும் அரசாணைகள் இருந்தன. மேலும், இந்த விவகாரத்தில் அதிமுக-வினர் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி திமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் எழுப்பின. அதே சமயம் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்பெண் அதிகாரியின் தலைமையில் விசாரணை நடைபெறவேண்டும் என அனைத்திந்தியஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைவழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. எனினும் சிபிசிஐடி விசாரணையே நடைபெற்று வந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு வழக்கை எடுத்த சிபிஐ  விசாரணையை தொடங்கியது. அதன்படி, இந்த விவகாரத்தில் சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. சிபிசிஐடி அதிகாரிகள் சேகரித்த ஆவணங்களை சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர். விசாரணையில் முதற்கட்டமாக தொழில்நுட்பம் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்தினார்கள். அவர்கள் வீடுகளில் ஆய்வுகளும், விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.இச்சூழலில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளியன்று சீலிடப்பட்ட உறையில்சிபிஐ அதிகாரிகள் தாக்கல்செய்தனர். இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து குற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.