india

img

கேரள சட்டமன்ற தேர்தலை திசைமாற்றும் முயற்சியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பாஜகவுக்கு சொந்தமானது..... கே.சுரேந்திரன் சூத்திரதாரி... 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்....

திருச்சூர்:
கேரளத்தில் பாஜகவின் தேர்தல் நோக்கங்களுக்காக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனுக்கு தெரிந்தே பணம் கடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரிஞ்ஞாலக்குடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொடகரா பணமோசடி வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாஜக பெங்களூரிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.4.40 கோடி திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை காவல் உதவி ஆணையர் (ஏசிபி) வி.கே.ராஜு வெள்ளியன்று (ஜுலை 23) தாக்கல் செய்தார்.

625 பக்க குற்றப்பத்திரிகையில் 22 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள் ளது. கே சுரேந்திரன் மற்றும் அவரதுமகன் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சாட்சிகள். பாஜக அமைப்புச் செயலாளர் எம்.கணேசன், திருச்சூர் மாவட்டத்தலைவர் கே.கே.அனீஷ்குமார், வட்டார செயலாளர் காசிநாதன், மாவட்டபொதுச் செயலாளர் ஹரி, பொருளாளர் சுஜய் சேனன், ஆலப்புழா மாவட்டபொருளாளர் கே.ஜி.கர்த்தா உள் ளிட்ட 219 சாட்சிகள் உள்ளனர். பாஜகதலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள், தர்மராஜன் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் கள் பற்றிய விவரங்களும் இந்த குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கொண்டு வரப்பட்ட கள்ளப் பணத்தில்இருந்து ரூ.6.3 கோடி திருச்சூரில் ஒப்படைக்கப்பட்டது. பாஜக ஆலப் புழா மாவட்ட பொருளாளர் கே.ஜி.கார்த்தாவிடம் ரூ.3.5 கோடியை ஒப்படைக்குமாறு இடைத்தரகர் தர்மராஜனிடம் அமைப்பு செயலாளர் எம்.கணேசன் மற்றும் அலுவலக செயலாளர் ஜி.கிரிஷ் ஆகியோர் கூறியிருந்தனர். திருச்சூர் அருகே கொடகரையில் வாகனத்திலிருந்து இப்பணம் சூறையாடப்பட்டது. இந்த ரூ.3.5 கோடியில் இதுவரை சுமார் ரூ.1.5கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தைக் கண்டுபிடிக்க மேலும்விசாரணை தேவை என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கொள்ளை ஏப்ரல் 3 ஆம் தேதி காலை கொடகராவில் காரை விபத்துக்குள்ளாக்கி நடந்தது. ஆனால், அதுகுறித்த புகார் 7 ஆம் தேதி அளிக்கப்பட்டது. தர்மராஜனின் ஓட்டுநர் ஷம்ஜீர் முதலில் ரூ.25 லட்சம் திருடப்பட்டதாக புகார் கூறினார்.பணமோசடி விவரங்கள் பின்னர்நடந்த விசாரணையில் வெளிச்சத் துக்கு வந்தது.

அமலாக்ககம் விசாரிக்க வேண்டும்
தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக நடந்த கள்ளப்பண பரிமாற்றம் சட்டவிரோதமானது. தேர்தல்சதித்திட்டத்திற்கான வாய்ப்பும் இதில்உள்ளது. இவையும் விசாரிக்கப்படும் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைவுக்கு உட்படுத்தக்கூடிய ஒருநடவடிக்கை என்பதால் அதுதொடர் பாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தவும் இந்த குற்றப்பத்திரிகையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவின்கண்டுபிடிப்புகள் மற்றும் குற்றப்பத்திரிகையின் நகல் அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சூருக்கு வந்தது ரூ.6.3 கோடி
கொடகராவில் கொள்ளையடிக் கப்பட்ட பணத்தைவிட மேலும் அதிகமாக, ரூ.6.3 கோடியை ரொக்கமாக திருச்சூரில் ஒப்படைத்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த பணம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றப்பத்திரிகையின் படி, தர்மராஜன் மூலம் வேறுபல மாவட்டங்களுக்கு பணம் கடத்தப்பட்டதாகவும் சிறப்பு விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருச்சூரில் ரூ.6.3 கோடிஒப்படைக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட தலைவர்கள் பிடிபட்டனர். வழக்கின் தொடக்கத்திலிருந்தே மாவட்டத் தலைவர்களின் பங்கு குறித்து விசாரணைக் குழு தெளிவுபடுத்தியிருந்தது. பாஜக மாவட்டத் தலைவர்கள் திருச்சூரில் பண மோசடிகும்பலுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

கொள்ளை நடந்த உடனேயே, தர்மராஜன் மற்றும் குற்றம் சாட்டப் பட்ட ரஷீத் ஆகியோருடன் மத்திய பகுதி செயலாளர் காசிநாதன் மற்றும்மாவட்ட பொருளாளர் சுஜய் சேனன்ஆகியோர் பாஜக மாவட்டக் குழுஅலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள்கொடகரா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் ஒளிந்து கொண்டனர். நான்கு நாட்களுக்கு பின்னர்புகார் அளிக்கப்பட்டது. திருச்சூர்மாவட்டத் தலைவர் கே.கே.அனீஷ் குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களை மாவட்டக் குழு அலுவலகத்திற்கு வரவழைத்திருந்தார். இந்த விவரங்கள் அனைத்தும் காவல்துறை (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் உள்ளன.

கொள்ளை வழக்கில்  22 குற்றவாளிகள்
கொடகரா பண மோசடி வழக்கின்முதல் கட்டத்தில் 22 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்களின் பட்டியலில் தற்போது கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் உள்ளனர். குற்றப்பத்திரிகையின் படி, கும்பல் கொள் ளைக்கு சிறப்பு பெட்டிகள் கொண்டஒரு கார் தயார் செய்யப்பட்டிருந்தது. எர்டிகா காரில் சிறப்பு பெட்டிகளில் பணம் வைக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில் கண்ணூர், கோழிக் கோடு, திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த முகமது அலி, எம்.கே.சுஜீஷ்,ரஞ்சித், தீபக், அரிஷ், மார்ட்டின், லபீப், அபிஜித், பாபு, அப்துல் ஷாஹித்,ஷுக்கூர், அப்துல் பஷீர், அப்துல் சலாம், அப்துல் ரஹீம், ஷிகில், அப்துல் ரஷீத், ரவூப் மற்றும் முகமதுஷாபி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. எட்வின், தீப்தி, சுல்பிகர் அலி மற்றும் ரஷீத் ஆகியோர் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள். தொடர்விசாரணையில் மேலும் குற்றவாளிகள் சேர்க்கப்படலாம்.

குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் எம்.ஜே.ஜோஜன், துணை ஆணையர் வி.கே.ராஜு, ஆய்வாளர்கள் பி.பி. ஜாய் மற்றும் பென்னி ஜேக்கப், துணை ஆய்வாளர்கள் சினோஜ், பெனடிக்ட், பினான், ராஜன் மற்றும் உதவி துணை-ஆய்வாளர்கள் அனில், ராஜீவ் மற்றும் சதீசன் மற்றும் இணைய குற்ற அதிகாரிகள் பினு, வினோத் சங்கர், ஜெரின் மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் அடங்கிய குழுஇந்த விசாரணையை நடத்தியது.அரசு வழக்கறிஞர் என்.கே.உன்னிகிருஷ்ணனை சிறப்பு வழக்கறிஞராக அரசு நியமித்துள்ளது.

கேரளம் வந்தது ரூ.40 கோடி
சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மராஜன் மூலம் கேரளாவில் பாஜக ரூ.40 கோடியை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த பணம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாஜகதலைவர்களுக்கு விநியோகிக்கப் பட்டது. கர்நாடகாவிலிருந்து ரூ.17 கோடியும், கோழிக்கோட்டில் முகவர்களிடமிருந்து ரூ.23 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை மார்ச் 5 முதல் ஏப்ரல் 5 வரை விநியோகிக்கப்பட்டது. மார்ச் 6 ஆம் தேதி,பெங்களூரில் இருந்து தர்மராஜனின்சகோதரர் தனராஜன் சேலம் வழியாககொண்டுவந்த ரூ.4.40 கோடி திருடப் பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.