தஞ்சாவூர், ஜூன் 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே வியாழக்கிழமை காலை 7 மணி வாக்கில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் மற்றும் மின் மாற்றி பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை இருந்துள்ளது. இதனால் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் பிடித்து வந்துள்ளனர். மேலும் நீண்ட தூரம் சென்று குடிதண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி செயலா ளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் என பலரிடமும் முறையிட்டும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், 50 க்கும் மேற்பட்டோர் சமத்துவபுரம் நாலு ரோடு அருகில் பேராவூரணி- ஊமத்தநாடு சாலையில் காலிக்குடங்க ளுடன் அமர்ந்து தண்ணீர் கேட்டு முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரி கள், பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மின் மாற்றி உடனடியாக பழுது நீக்கப்படும். குடிநீர் குழாய் அடைப்பு சரி செய்து தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக் கள் கலைந்து சென்றனர்.