tamilnadu

img

திருச்சியில் 2 இடங்களில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 12- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள ஜெ.ஜெ.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 432 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மாநகராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள் காலிக் குடங்களுடன் வெள்ளியன்று கொள்ளிடம் செக்போஸ்ட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனை யடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.  இதே போல் முசிறி ஒன்றியம் பெரியகொடுந்துறையில் குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், கிளைச் செயலாளர் நடராஜன் தலைமையில் வெள்ளியன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து பிடிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முசிறி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, சிஐடியு தலைவர் ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணன், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.