tamilnadu

img

தேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?

திருச்சி:
மத்திய பாஜக அரசால் வெளியிடப்பட்டி ருக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019வரைவு அறிக்கை கஸ்தூரி ரங்கன் குழுவினால் தயாரிக்கப்பட்டு 5 மாதத்திற்கு மேல் தாமதத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்டுஒரே மாதத்திற்குள் மக்கள் கருத்தை தெரிவிக்கவும் கேட்டிருந்தது. தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாகவும், தமிழக நாடாளுமன்ற உறுப்பின ர்கள் மத்திய மனிதவள  மேம்பாட்டுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்ட தன் பேரிலும் ஒருமாத காலம் கூடுதல் அவ காசம் (ஜூலை31 வரை) தரப்பட்டது.

இதற்கிடையில் இந்த அறிக்கையின் மேல் கருத்து கேட்கும் கூட்டம் நாடு முழுவதும் நடப்பதாக அறிவிப்பு வந்தது. கோவையில் நடந்தகருத்துக்கேட்பு கூட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்பினர் கூட்டம் நடந்த இடத்திலேயே சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.இந்நிலையில், ஜூலை 19 வெள்ளியன்று திருச்சியில் தூயவளனார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு  பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், வெகுசில தலைமை ஆசிரியர்களைத் தவிர ஊடகங்களுக்கோ, கல்வியாளர்களுக்கோ, சமூக ஆர்வலர்களுக்கோ முறையாக தகவல்தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், ரகசியமாக ‘கருத்துக்கேட்பு’ கூட்டம் நடத்தப்படுவது பற்றி தகவல் அறிந்ததமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் நடந்த அறைக்குள் சென்று தங்கள் கருத்துக்களையும் கேட்க வலியுறுத்தினர். ’’ இது அலுவலர்களுக்கான கூட்டமே’’  என்று அதிகாரிகள் மழுப்பியதால், ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் அரசைக் கண்டித்து ஆவேச முழக்கம் எழுப்பினர்.இந்நிலையில், அதிகாரிகள், போராட்டக் காரர்களிடம் செய்தியாளர்கள் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டத்தை விளம்பரப்படுத்தி நடத்துவோம் என்ற உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.இதில் வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர்சந்திர பிரகாஷ், மாணவர் சங்க செயலாளர் மோகன், துணைத்தலைவர் துளசி,தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநகரதலைவர் இளங்குமரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு வெற்றி செல்வன், பகுதி செயலாளர்கள் கார்த்தி கேயன், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலந்துகொண்ட கல்வியாளர்களும் வெளிநடப்பு செய்தனர். 

அறிவியல் இயக்கம்,தமுஎகச கண்டனம்
இந்நிலையில் அரசின் இத்தகைய ‘ரகசிய அணுகுமுறைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கல்வி குறித்த வரைவு அறிக்கையில் கருத்து தெரிவிக்க பேரா சிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியில் பணியாற்றக்கூடிய அமைப்புகள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூறியுள்ளது.கோவை, திருச்சி போலவே மதுரை, சென்னையிலும் நடக்கவுள்ள கருத்துக் கேட்புக்கூட்டத்தை ரகசியமாக நடத்தக் கூடாது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்களை அழைத்து வெளிப் படையாக கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும் வரைவு அறிக்கையின் மீது கருத்துச்சொல்ல குறைந்தது 6மாத காலஅவகாசம் வேண்டும். புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையானது இன்னும் முழுமை யாக மக்களிடம் சென்றடையவில்லை. எனவே  புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைமீதான  கருத்துக்கேட்பை தமிழக அரசு முறையாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமுஎகச தலைவர்கள் சு.வெங்கடேசன் எம்பி, ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில், பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படு கிறது; இதை ஏற்க முடியாது; கோவையிலும் இதே போல் நடத்தப்பட்டு கடும் கண்டன முழக்கம்எழுப்பப்பட்டது; கோவை, திருச்சி போல் அல்லாமல் மதுரை, சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.