கொள்ளிடம் பகுதியில் தொடர் மின்தடை: மக்கள் அவதி
சீர்காழி, மே 23-கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. மின்தடையால் கிராமங்களுக்கு வழக்கமாக பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து அனுப்புவதற்கு மின்சாரம் தடைபடும் பொழுது மின்மோட்டார் இயங்காமல் போகிறது. இதனால் வழக்கமாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுவதால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.இதே போல் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் உரிய நேரத்தில் சென்று சேருவதில் தடையும், தாமதமும் ஏற்படுகிறது. மின்தடையால் பள்ளி மாணவர்கள் உரிய சான்று பெற வேண்டி இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க சிரமம் அடைந்து வருகின்றனர். மின்தடையால் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை உரிய நேரங்களில் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டும் வேளையில் மின்தடையால் மின்மோட்டார் இயங்காமல் போவதால் தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணியை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. மின்தடை பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது 45 நிமிடங்களுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
நாகர்கோவில், மே.23-கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள்நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கியது, முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தடிக்காரண்கோணம் பகுதி, பொற்றியூர் பூத்களில் பதிவான 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியை திறக்க முடியவில்லை. அப்போது அங்கிருந்த அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சித்தனர்.இதற்கு அங்கிருந்த அரசியல்கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, அனுபவமிக்க அலுவலர்களை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்ய வேண்டும் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவருமான பிரசாந்த் வடநேரே வாக்குஎண்ணும் இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பழுது நீக்கப்பட்ட பின்னர், சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கையை ஏமாற்றிய விவகாரம் உதவி ஆய்வாளர் பணிநீக்கம்
திருநெல்வேலி, மே 23-திருநங்கை அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் விஜய சண்முகநாதன், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, நகை , பணத்தை மோசடி செய்துவிட்டார்’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திருநங்கையின் புகார் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கை நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சராத்கரிடம் சமர்ப்பிக்கட்டது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதனை புதன்கிழமை இரவு பணி நீக்கம் செய்து சரக டிஐஜி கபில்குமார் சராத்கர் உத்தரவிட்டுள்ளார்.