சீர்காழி, ஜூன் 30- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் கிராமச் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இளநிலை உதவி யாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேட்டங்குடியிலிருந்து வெள்ளகுளம் செல்லும் 3 கிமீ தூரச் சாலையை மேம்படுத்த வேண்டும். கேவரோடை பொதுக்குளத்தை தூர்வார வேண்டும். வேட்டங்குடி ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி மூலம் நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்த நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போல் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி கிராமச் சபை கூட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குதல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய உதவிப் பொறியாளர் மகேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி பகுதிகள்
தரங்கம்பாடி மாணிக்கபங்கு ஊராட்சியில் மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து தலைமையில் கிராமச் சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் புவனேஷ்வரி உள்படப் பலர் கலந்து கொண்டனர். பிள்ளை காலனியில் புதிதாகக் குடிநீர் இணைப்பு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் மீரா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் மதியழகன் கலந்து கொண்டார். மடப்புரம் ஊராட்சியில் செயலர் ஜீவா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆக்கூர் ஊராட்சி பஞ்சாகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊர் நல அலுவலர் நட்ராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் முருகானந்தம் உள்படப் பலர் கலந்து கொண்டனர். மேலும் பரசலூர், முடிகண்டநல்லூர் ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.