நகை பறிக்க முயன்றவர் போலீசிடம் சிக்கினார்
கும்பகோணம், ஏப்.10-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் மல்லிகா(22) தாராசுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மல்லிகா பணியை முடித்துவிட்டு மாலை கலைஞர் மீன் மார்க்கெட் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்,அவர் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். தப்பித்துஓடிய கொள்ளையனை, அப்பகுதியில் பணியில் இருந்தமேற்கு காவல்துறையினரும் பொதுமக்களும் விரட்டி பிடித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்துறை ஆய்வாளர் மணிவேல் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையனிடமிருந்த செயினை பறிமுதல் செய்தார். வழிப்பறியில் ஈடுபட்டவர் குடவாசல் தாலுகா பகுதியைச் சேர்ந்த சுந்தர்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர், ஏப்.10-தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் நடைபெற்றதை மாவட்ட தேர்தல்நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார். அப்போது வேட்பாளர்களின் விவரங்களை பொருத்துதல், கையொப்பமிடுதல், முத்திரையிடுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து மண்டல அலுவலர்களுக்கு விளக்கினார்.பேராவூரணியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பேராவூரணி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் சமூகபாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியர் செ.ஸ்டெல்லாஞானமணி பிரமீளா, வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணைவட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.