tamilnadu

img

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 30 பேர் படுகாயம்!

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தை நோக்கியும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூரை நோக்கியும் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இரு தனியார் பேருந்துகள் இன்று காலை சென்று கொண்டிருந்தன. அப்போது தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே வந்து கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுகாமல் தப்பியது. இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன் பக்கமும் முழுவதும் நொறுங்கியது. பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால் தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் கூறும்போது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், மது போதையில் இருந்ததாகவும், அதோடு செல்போன் பேசிக்கொண்டும் அதிவேகமாகப் பேருந்தை ஓட்டி வந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்தனர்.