கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஈச்சர் லாரி மீது மோதிய விபத்தில் 2 மாத ஆண் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜேகப் ஆபிரகாம் (60). ஷீபா (55). இவர்களது மகன் தாமஸ் குரியாகோஸ், மருமகள் எலீனா தாமஸ் (30), பேரன் ஆரோன் தாமஸ் ( 2 மாதம்). தாமஸ் குரியாகோஸ் துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெங்களூர் செல்வதற்காக ஜேகப் ஆபிரகாம், மனைவி ஷீபா, மருமகள் எலீனா தாமஸ், பேரன் ஆரோன் ஆகியோர் ஆல்டோ காரில் கேரளாவில் இருந்து கோவை வழியாகச் சென்றனர்.
அப்போது காரை ஜேகப் ஆபிரகாம் ஓட்டியுள்ளார். கொச்சின் – சேலம் தேசிய நெடுஞ்சாலை, மதுக்கரை போடிபாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே கரூரில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற ஈச்சர் கொரியர் வாகனம் மீது நேரு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த ஜேகப் ஆபிரகாம் (60), மற்றும் ஷீபா (55), ஆரோன் தாமஸ் (2 மாதம்) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாமடைந்து உயிருக்குப் போராடிய எலீனா தாமஸை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் ஜேகப் ஆபிரகாம், ஷீபா மற்றும் ஆரோன் ஆகிய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றினர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மதுக்கரை காவல்துறையினர் கொரியர் வாகனத்தை ஓட்டி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தன் மகன் சக்திவேல் (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.