திருவாரூர் செப்16- அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் இல்லா தமிழகத்தினை உருவாக்கிடும் நோக்கில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் உணவிற்காக விற்பனை செய்யப்படும் உப்பு மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் விற்பனைக்கு உள்ள உப்பு பாக்கெட்டுகளை ஆய்வு செய்ய உள்ள நுகர்வோர் ஆர்வலர்களுக்கான செயலூக்க பயிற்சி திருவாரூர் காசிஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தியா அயோடின் சர்வே முடிவுகளை நியுட்ரீசியன் இண்டர்நேசனல் அமைப்பு கடந்த வாரத்தில் வெளியிட்டது. இதில் தமிழகத்தில் 61.9 சதவீத மக்கள் மட்டுமே உணவிற்கு அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தி வருகின்றார்கள் என்று அந்த ஆய்வு முடிவு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. 100 சதவீதம் அயோடின் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை நுகர்வோர் அமைப்பு பிரதிகளின் இந்த ஆய்வு பணி உறுதி செய்ய வேண்டும் என்றும், நுகர்வோர் ஆர்வலர்கள் உப்பு மாதிரிகள் எவ்வாறு சேகரிக்க வேண்டும், சேகரிக்கப்பட்ட உப்பு மாதிரிகளை எவ்வாறு ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கடை வியாபாரிகளுக்கு அளிக்க வேண்டிய தகவல்கள் குறித்தும் விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பெருந்தலைவர் முனைவர் எஸ்.டி.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார் மாவட்ட வருவாய் அலுவலர் சார்பாக வட்டாட்சியர் எம்.நக்கீரன். நியுட்ரீசியன் இன்டர்நேசனல் அமைப்பின் திட்ட மேலாளர் சையத் அகமது, உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், பொட்டலப்பொருட்கள் விதிகள் குறித்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் நுகர்வோர் ஆர்வலர்களின் அணுகுமுறை குறித்து உப்பு ஆலோசகர் சரவணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கடந்த 2 ஆண்டுகள் ஆய்வு முடிவுகளை யும், வரும் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் போ.பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு ஆகியோர் விளக்கினார்கள். இந்த பயிற்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஏ.தியாகராஜன் அக்டோபர் 21 உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அத்தினத்தன்று பள்ளி மாணாக்கர்களின் வீட்டில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என தெரிந்து கொள்ளவும் அயோடின் கலந்த உப்பின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு பெறவும் ஏற்பாடு செய்ய உறுதி கூறியுள்ளார். மையத்தின் பொதுச்செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.