நாகப்பட்டினம், ஏப்.24-நாகப்பட்டினம் நகராட்சி, உணவுப்பாதுகாப்புத் துறை சார்பில் நாகூர் வணிகர் சங்கக் கட்டிடத்தில், செவ்வாய்க்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் நடைபெற்றது.நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் தலைமை வகித்தார். நாகூர் வணிகர் சங்கத் தலைவர் சரவணப்பெருமாள் வரவேற்புரையாற்றினார். வணிகர் சங்கச் செயலாளர் ஹிமாயத் அலி மற்றும் துணைத் தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜி.வரலெட்சுமி சிறப்புரையாற்றினார்.அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பயன்படுத்தப்படும் காரீயம் (லெட்)உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதாகும். எனவே, உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம் இதனைத் தடைசெய்துள்ளது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருட்களைத் தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் விற்பனை செய்வது குற்றம். ஆகவே அச்சடித்த காகிதங்களில் உணவை விற்பது மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது என விளக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப் பட்டால் பறிமுதல் செய்வதோடு சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது. நாகூர் வர்த்தகர் சங்கச் செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார்.