தஞ்சாவூர், மே 10-ஜன.1 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் ரொக்கமாக உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் நகரில் 7 இடங்கள் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம் உள்பட 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் வடக்கு வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் கோவிந்தராசு, பொருளாளர் கோதண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ப.அந்துவன் சேரல் விளக்கவுரையாற்றினார்.சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் நிறைவுரையாற்றினார். வட்டப் பொருளாளர் எம்.மேகநாதன் நன்றி கூறினார். இது போல் வேதாரணியம், தலைஞாயிறு உள்பட மாவட்டத்தில் 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.தயாளன், பா.சிவக்குமார், குமரி ஆனந்தன், சாலைப் பணியாளர் சங்க சுப்ரமணி உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அனைத்து அரசு ஊழியர்களும், துறைவாரி ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கரூர்
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மண்மங்கலம் வட்டக் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்க மாநில துணைத்தலைவர் எம்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கரூர் 1-வது வட்டக் கிளைத் தலைவர் அறிவழகன், செயலாளர் பாலசுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.