விவசாயத் தொழிலாளர் சங்கம் புகார் மனு
அரியலூர், மே 6-அரியலூர் மாவட்டம் செந்துறைதாலுகாவைச் சேர்ந்த தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்தியினர் மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அனைத்து வசதிகளும், அரசாலும், சாதி ஆதிக்க சக்தியினரும் மறுக்கப்பட்டுள்ளது. 262 வீடுகள் உள்ள தலித் மக்கள் அன்றாட சொந்த உபயோகத்திற்கு இந்த ஆதிக்க சக்தியினரின் மளிகைக் கடை, டீக்கடை போன்றவை தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது அவர்கள் அங்கு வந்து செல்ல பல்வேறு வகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.அரசு தரப்பில் உடனடியாக ரேஷன் கடையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என அரசு உதவியுடன் உடனடியாக மளிகைக் கடையும் வைத்து தருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கூறியது. அதன் காரணமாக அவர்கள் இன்று நடைபெறும், நாளை நடைபெறும் என்று பல்வேறு இன்னல்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தலித் மக்களை மிரட்டி, 100 நாள் வேலை அட்டையை வாங்கிக் கொண்டு இவர்கள் வேலை செய்ததாக கணக்கு பதிவேட்டில் பதிவு செய்து சொற்பமான தொகையை கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை சாதி ஆதிக்க சக்தியினரும், அரசு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களும் பெற்று வந்தது அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நேரடி ஆய்வில் தெரியவந்தது.
அந்த நேரடி ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மணிவேல், விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கிராமங்களுக்குச் சென்று ஒவ்வொரு மனிதராக சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அதன் மூலம் தான் இந்த மாதிரியான குளறுபடிகளுக்கு அரசு அதிகாரிகளுக்கும் சாதி ஆதிக்க சக்தியினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.இது தொடர்பான புகாரினை செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வீ.அமிர்தலிங்கம் கொடுக்க முயற்சித்த போது, நானே இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை கண்காணித்து வருகிறேன். வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறினார். இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியர் மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் மேலதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு பயந்து கொண்டு நான்கு நாள்ஆகியும் இதுவரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்ததாக தெரியவில்லை.அத்துடன் தாக்குதலுக்குள் ளான மக்களுக்கு, அரசு உரியஇழப்பீடு இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரியநடவடிக்கை எடுத்து முறையாக விசாரணை செய்து தலித் மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.