சீர்காழி, ஏப்.7-கொள்ளிடம் அருகே வெள்ளைமணல் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு துணி கட்டி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் வெள்ளைமணல் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த 260 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த40 ஆண்டுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து வெள் ளைமணல் கிராமத்திற்குச் செல்ல 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்குசாலை வசதி அமைத்து தரப்படவில்லை. வயல் பகுதியில் தான் சென்றுவருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் சாலை அமைக்கவில்லை. மேலும் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் வனத்துறை சார்பில்சாலை அமைக்க அனுமதியளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளைமணல் கிராமத்திற்கு செல்ல ஒரு வாரத்திற்குள் சாலை அமைக்கத் தவறினால் வரும்நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மக்கள் தெரிவித்தனர். இதனிடையே சாலை அமைக்காததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சனியன்று முதல் அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து கிராமத் தலைவர் களான பாண்டியன், விஜய்பாரதி, மணிகண்டன் ஆகியோர் கூறுகையில், வெள்ளை மணல் கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி அமைக்காததைக் கண்டித்து கருப்புக் கொடி கட்டி அனைத்து கிராம மக்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வரும் 18 ஆம்தேதி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கவும், தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம். வரும் 18-ஆம் தேதி வரை வெள்ளைமணல் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டியிருக்கும் அதுவரை இக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்திருப் போம் என்றனர்.