தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த புதுவிடுதி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக, பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர், புதுவிடுதியைச் சேர்ந்த ராஜூ, அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் மீது கடந்த 15 தினங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜூவை கடந்த 15 தினங்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அருள்பாண்டியன், இளங்கோவனை தேடி வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அருள்பாண்டியன், இளங்கோவன் இருவரும் புதுவிடுதி கடைத்தெருவில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு காவல்துறை ஏட்டு செந்தில்குமார் (41), தஞ்சாவூர் ஆயுதப்படை காவலர் ஆல்வின் (29), இருவரும் புதுவிடுதிக்கு சென்று அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்ய முயன்றுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இருவரும் கட்டையால் காவலர்களைத் தாக்கியுள்ளனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காவலர்களை சாராய வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஏட்டு செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து அருள்பாண்டியன், இளங்கோவன் இருவரையும் தேடி வருகின்றனர். காயமடைந்த இரண்டு காவலர்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் இடையே சுமார் 20 நிமிடம் தள்ளுமுள்ளு சண்டை நடந்ததாகவும், அப்பகுதியில் சென்றவர்கள், அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.