இந்தாண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நேற்று நடந்த போட்டிகளில் ராகி சர்னோபாத் மற்றும் சௌரப் சௌத்ரி ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
ஜெர்மனி நாட்டில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 17 வயதாகும் சௌரப் கடந்தமுறை தில்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக கலந்து கொண்ட அவர் 245 புள்ளிகளுடன் முந்தைய சாதனையை முறிடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது நேற்று நடந்த போட்டியில் 246.3 புள்ளிகளுடன் அவருடைய முந்தைய சாதனையையே முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடந்த பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபாத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ராகி சர்னோபாத் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ராகி சர்னோபாத் கடந்த 2013ல் நடந்த உலகக்கோப்பையில் ஏற்கனவே தங்கம் வென்று உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர்.
இதே பிஸ்டல் பிரிவில் முன்னணியில் போட்டியிட்டு வந்த இந்திய வீராங்கனை மானு பக்கர் தனது துப்பாக்கியின் பழுது காரணமாக கடைசி சுற்றில் இருந்து வெளியேறினார். இருப்பினும் அவர் மொத்த பட்டியலில் 5ம் இடம் பெற்றார். மேலும், இதே உலகக்கோப்பைத் தொடரில் நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அப்ருவி சந்தேலா தங்கப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.