மன்னார்குடி, ஆக.28- தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க திருச்சி மண்டலம் சார்பில் மன்னார்குடியில் மின்வாரிய பொறியாளர்களுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம், மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் குறித்து மன அழுத்தம் மேலாண்மை பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட கிளைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் கிளை செயலாளர் ரவிச்சந்திரன், திருமக்கோட்டை எரிவாயு மின் சுழலி மேற்பார்வை பொறியாளர் சம்பத் மஹாராஜா ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். திருச்சி மண்டலச் செயலாளரும், தேசிய பயிற்சியாளருமான முனைவர் சம்பத், ஜேஸீஸ் பயிற்சியாளர் கருணாகரன், காந்தி, லெனின் ஆகியோர் மன அழுத்தம் மேலாண்மை எனும் தலைப்பில் பயிற்சியளித்தனர். மன அழுத்தம் எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு மிகாமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது உடல், மனம், உயிர் மூன்றும் சீராக இயங்கும். தினமும் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்வது மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று பயிற்சியில் விளக்கமளித்தனர். முகாமில் ஏராளமான மின் பொறியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.