tamilnadu

img

மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துக! வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 5-தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் செவ்வாயன்று பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.முகமது ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் தீபா கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாநிலக்குழு உறுப்பினர் இ.மைதிலி, மாவட்டப் பொருளாளர் எஸ்.இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் நூலகங்கள் அமைக்க வேண்டும். கூரை மற்றும் ஓட்டுக் கட்டிடங்களை அகற்றி காங்கிரீட் கட்டிடங்களாக தரம் உயர்த்திட வேண்டும். அனைத்து பாடங்களுக்கும் தகுதியான ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகள் 25 சதவீத மாணவர்களின் இடத்தினை முழுமையாக நிரப்ப வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  மேம்படுத்திட வேண்டும். அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை பள்ளி துவங்கும்போதே வழங்க வேண்டும்.2018-2019 ஆண்டின் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மதிய உணவினை தரமானதாக வழங்க வேண்டும். அனைத்து பேருந்துகளும் பள்ளி நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சைக்கிள் நிறுத்தும் இடம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் செவ்வாயன்று ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் இரட்டைமலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சேதுபதி ஆகியோர் பேசினர்.