திருவாரூர், ஆக.28- தற்போதைய முறையற்ற தூர்வாரும் பணியால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தூர்வாரும் பணியினை உடனடியாக நிறுத்தி ஒரு போக சாகுபடியையாவது விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் சம்பா சாகுபடிக்கு வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வி.எஸ்.கலியபெருமாள் மேலும் பேசியதாவது, வழக்கம் போல விவசாயிகள் சாகுபடிக்கு பணத் தட்டுப்பாடுடன் கையறு நிலையில் உள்ளனர். எனவே கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு கடன் வழங்கிட வேண்டும். வேளாண் துறை கிடங்குகளில் கோ-109 ரக விதைகள் மட்டுமே உள்ளது. கோ-50, கோ-51 ரக விதைகள் இல்லை. அவற்றை விரைவாக வரவழைத்து தர வேண்டும். கோவில் நிலங்களில் சாகுபடி செய்யக் கூடிய விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலமாக சிட்டா அடங்கல் கிடைக்காததால் நடவு மானியம் கிடைப்பதில்லை. எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் விவசாயிகள் நிவாரணத் தொகை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கிடைப்பதில்லை. மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்து இந்த நிவாரணத் தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும். 2017 ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் விவசாயிகள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தனர். தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரத்து 115 இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இதற்கான கணக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை. தென்னை மரமே இல்லாத பல பேருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அரசின் கடுமையான விதிகளின் காரணமாக சிறுகுறு தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை வேளாண் துறை அலுவலகத்தில் 700 தென்னை விவசாயிகள் இழப்பீடு கோரி மனு அளித்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைபெறும் மேம்பால பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்காலிக நடைபாலம் அமைத்து தர வேண்டும் என்றார்.