திருவண்ணாமலை, ஏப். 20-திருவண்ணாமலை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பலியாகினர். உயிரிழந்த 5 பேரின் உடல்கள், சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இதில், தாமரைப் பாக்கம் பகுதியை சேர்ந்த, தணிகாசலம் (50), பிச்சான்டி (51), ரவிசந்திரன் (49), ஜெயமுருகன் (25) அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்த வேலு (36),பெரியகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (55) ஆகிய 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோப் காயிறு அறுந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானர்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டதாகக் கூறி, தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து தி.மலை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி உரிமையாளரை தேடி வருகின்றனர். இதற்கிடையே பலியான 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சனிக்கிழமையன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.