திருவண்ணாமலை,டிச.29- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (67). இவருக்கு முருகன், லட்சுமணன், சேகர் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளின் 3 ஆவது மகன் சேகருக்கும், அவரின் மனைவி சத்யாவிற்கும் தகராறு ஏற்பட்டு தனியாக வசித்து வந்துள்ளனர். மனைவி தன்னுடன் வாழ்க்கை நடத்தாதற்கு தந்தை பெருமாள் தான் காரணம் என சேகர் அடிக்கடி கூறி வந்துள்ளார். வெள்ளியன்று இரவும், தந்தைக்கும் சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.