திருவள்ளூர், மார்ச் - தமிழக அரசு 2017-ல் பிறப்பித்துள்ள அரசாணைஅடிப்படையில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ.11,262-வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.9639-வழங்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று ( மார்ச்.16) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் க.பீம்ராவ், சிஐடியூ மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாநில குழு உறுப்பினர் டி.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் ஜெ.ரமேஷ் ஆகியோர் பேசினர்.இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 7-வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை கடந்த 30-மாதங்களாக கொடுக்கவில்லை. அரசாணை 303-ன் படி பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என அரசு ஆணைகளை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைகளை ஒன்றை கூட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை.இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 3-ஆண்டுகள் பணிமுடித்த டேங்க் ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், 2013-ல் பணி நியமனம் செய்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணையின் படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.