கும்மிடிப்பூண்டி, ஆக.3- கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை கிராமம் அருகே கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. சனிக்கிழமையன்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்கள். வெள்ளியன்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து கடப்பாரையால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்து உள்ளனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த அலாரம் ஒலித்தது. பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது என காவல்துறை வட்டாரங்கள் கூறுகிறது. இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.