திருப்பூர், ஏப். 18 – கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை, வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களிடம் கேபிள் டிவி கட்டணம் வசூலிப்பதில் சிரமம் உள்ளது. எனவே மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக கேபிள் டிவி பொது நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.வீரமுத்து கோரியுள்ளார். திருப்பூரில் தமிழக கேபிள் டிவி பொது நல சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.வீரமுத்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் அனைத்து மக்களும் வீட்டில் அமைதியாக இருக்க ஒரே பொழுதுபோக்கு மற்றும் விரைவான தகவல் தொடர்பு என்பது கேபிள் டிவியே ஆகும். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு அஞ்சாமல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் 24 மணி நேரமும் உழைத்து கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து இதுவரை எவ்வித வருமானமும் இல்லாமல் இருக்கும் மக்களிடம் கேபிள் டிவிக்கு மாத சந்தா தொகை வசூலிப்பதில் கடும் சிரமம் உள்ளது. எனவே நாடு இயல்பு நிலை திரும்பும் வரை கேபிள் டிவிக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதேபோல் கேபிள் டிவியின் வழியாக டிடிஎச், ஐபி, டிவி போன்ற கட்டணச் சேனல்களின் விலையை ஒழுங்குபடுத்த கடந்து 2019 ஜனவரியில் புதிய கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அனைத்து கட்டணச் சேனல்களையும் மறுசீரமைப்பு செய்வதற்கு புதிய கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டணச் சேனல்களிடம் தங்களுடைய கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
நாட்டு மக்கள் தற்போது உள்ள நிலைமையை கணக்கில் கொண்டு, கட்டண சேனல்கள் தங்களுக்கு எம்எஸ்ஓ-க்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தை இயல்பு நிலை திரும்பும்வரை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சேனல்களிலும் தற்போது புதிய நிகழ்ச்சிகள் ஏதுமின்றி பழைய நிகழ்ச்சிகளே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதேசமயம் அனைத்து மக்களும் தற்போது செய்திச் சேனலையே பார்க்கிறார்கள். இந்நிலையில் பெரும்பகுதி மக்கள் தற்போது இலவச சேனல்கள் மட்டும் ஒளிபரப்பானால் போதும் என வலியுறுத்துகிறார்கள். எனவே தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டண சேனல் இல்லாமல் புதிய ஒரு வரையறுக்கப்பட்ட பேக்கேஜ் வடிவமைத்து வரும் 1ஆம் தேதி முதல் இலவச சேனல்களை ஒளிபரப்ப வேண்டும்.
இதன்மூலம் கட்டணச் சேனல்களின் விலையை குறைக்க முடியும். தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் கேபிள் டிவி மாதாந்திர கட்டணத்தை மக்களிடத்தில் வசூல் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு கட்டணச் சேனல்கள் தங்களுடைய கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன், இயல்பு நிலை திரும்பும் வரை குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவியை ஒளிபரப்பவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் எம்.குமார், பி.பாலகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.