திருப்பூர்:
கொரோனா தொற்று பேரிடர் தடுப்புப் பணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவி மையத்தின் மூலம் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள், இருபது ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 30 தன்னார்வத் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொரோனா தடுப்பு உதவி மையத்தின் சார்பில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் பல்வேறு விதமான சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தானக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு 270 லிட்டர் ரத்த மாதிரிகள் சேமிப்புக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று ரூ.31ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தொற்றாளர்களை உடனடியாக மருத்துவ உதவி மையங்கள் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தானக் கழகத்தின் சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான சிலிண்டர்கள் தேவை இருக்கும் நிலையில் வாலிபர் சங்கத்தின் சார்பில் 10 சிலிண்டர்களும், திருப்பூர் ஆடிட்டர்கள் சங்கத்தின் சார்பில் 10 சிலிண்டர்களும் என மொத்தம் 20 சிலிண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தொற்றாளர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், அவர்களது உறவினர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது, உணவு பார்சல்கள் வாங்கித் தருவது ஆகிய பணி களுக்கு 30 தன்னார்வலர் இருசக்கர வாக னங்களையும் ரத்த தானக் கழகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.இந்த ஆம்புலன்ஸ், சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கும் எளிய நிகழ்ச்சி திங்களன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு உதவி மையத்தின் அமைப்பாளர்கள் செ.முத்துக்கண்ணன், கே.ரங்கராஜ், ஆர்.குமார், ஆர்.மைதிலி, சம்சீர் அகமது மற்றும் ரத்த தானக் கழகத்தின் கன்வீனர் து.சம்பத், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்பட உதவி மையத் தொண்டர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த சேவையின் நோக்கத்தை விளக்கி முத்துக்கண்ணன் சுருக்கமாக உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாநகர நலஅலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ண குமார், மாநகரக் காவல் தெற்கு துணை ஆணையர் நவீன்குமார், வடக்கு உதவி ஆணையர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.