tamilnadu

img

கிராமப்புற விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க  மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியருக்கு கடிதம்

 திருப்பூர், ஏப். 19 – கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் கிராமப்புற விவசாயிகளுக்கும், முறைசாராத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனுக்கு ஞாயிறன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறையினர், காவல் துறையினர், நோயாளிகள் உள்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள், கவசங்கள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும்.  

குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தோருக்கு அரிசி, பருப்பு வழங்குவது போதுமானதாக இல்லை, அரசு அறிவித்திருப்பதற்கு மாறாக நபருக்கு 2 கிலோ உணவு தானியம் வழங்குவது பட்டினியை மேலும் தீவிரமாக்கும். எனவே 15 கிலோ வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முதியோர் உதவித் தொகை பெறுவோர், மாற்றுத் திறனாளிகள், ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், கிராமப்புறத்தில் உழவர் அட்டை வைத்துள்ள விவசாயிகள் உள்பட தேவைப்படும் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் அரசு அறிவித்த உதவித் தொகை வழங்கிட வேண்டும், விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், பெயர்ப் புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் பெறுவதற்கான வழிமுறை தெரியாமல் திணறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை, நலவாரியத்தின் பொறுப்பு அதிகாரிகள் இது குறித்து தெளிவுபடுத்துவதுடன், அவர்களுக்கு உணவு தானியம் கிடைப்பதற்கு உரிய வழிமுறையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

 இம்மாவட்டத்தில் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு நிறைவுக்குப் பிறகு தொழிலை சுமூகமாக முன்னெடுத்துச் செல்ல, தொழிலாளர், தொழில் முனைவோருக்குத் தேவையான சலுகைகளை அறிவிக்க வேண்டும், அதற்காக தொழில் முனைவோர், தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச மாவட்ட நிர்வாகம் முன்முயற்சி எடுக்க வேண்டும், வேலையின்மைக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு சர்வாதிகார மனப்பான்மையுடன் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது இயற்கை நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. எனவே இந்த அறிவிப்பை கைவிட வேண்டும். இவ்வாறு இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.