திருப்பூர், ஏப்.25-
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், இராமபட்டணம் என்ற ஊரில் ராமசாமி (வயது 75) அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்தில் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் ராசிபாளையம்-பாலமேடு வரையிலான 400 கே.வி. உயர்மின் அழுத்த மின் கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்த நிலையில், ரூ 10 லட்சம் வழங்க ஒத்துக் கொண்டு ரூ 2 லட்சம் என குறைந்த தொகையை மட்டும் கொடுத்து ஏமாற்றி, உயர்மின் கோபுரத்தை அமைத்து விட்டார்கள். அவர் கோரியபடி உரிய இழப்பீடு வழங்காததால் விவசாயி ராமசாமி உயர் மின் கோபுரத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடத்தில் தமிழக அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, உயர்ந்தபட்ச இழப்பீடு, வாழ்வாதார பாதிப்புக்கான நிவாரணம், மாற்றுப்பாதையில் செயல்படுத்துகிற திட்டத்தை பரிசீலிக்காமல் அதிரடியாக திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் காரணமாக விவசாயிகளிடத்தில் பதற்றம் ஏற்பட்டு இப்படிப்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கிறது. பலவிவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே உண்மையை மறைக்காமல் உரிய பிரிவுகளின் கீழ் விவசாயி மரணத்தை பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் பவர்கிரீட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி கடும் எதிர்ப்புக்கு இடையில் அனுமதி ரத்து செய்ய பட்டதை நினைவூட்ட விரும்புகிறோம். ஆகவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர்
செ.முத்துக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.