நாட்டில் 2.5 லட்சம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை வழக்குகள் நிலுவை!
பிசிஆர் வழக்குகளில் 1% மட்டுமே தண்டனை
புதுதில்லி, ஜூலை 17 - பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும், நீதிமன்றங்களில் 2.33 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கை மூலமாகவே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 97 சதவிகித வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவை அதேபோல பதிவு செய்யப்பட்ட ‘தீண்டாமை’ வழக்குகளில் 97 சதவிகிதம் நீதி மன்றங்களில் நிலுவையில் இருப்பதும் அம்பல மாகியுள்ளது.
முடித்து வைக்கப்பட்ட 3 சதவிகித வழக்குகளில், பெரும்பாலானவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளி விவரங்கள், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல் படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் 2022 அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். தீண்டாமைக்கு எதிரான சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (பிசிஆர்) -1955 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 2022-இல் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை நீதிமன்ற மட்டத்தில், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,242 வழக்குகள் இதுவரை விசாரணைக்காக காத்திருக்கின்றன. இவற்றில், 2022-இல் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 31 வழக்குகளில் ஒன்றில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது; மீத முள்ள 30 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டு அறிக்கைகளின் மதிப்பாய்வானது, 2019 மற்றும் 2021-க்கு இடையில் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 37 பிசி ஆர் சட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 12 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தேசிய குற்றப்பதிவு அமைப்புக்கு (NCRB) வழங்கப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பிசிஆர் சட்டத்தின் கீழ் மொத்தம் 13 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-இல் 24 ஆகவும் 2020-இல் 25 ஆகவும் இருந்தது. 1989-இல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு இதுபோன்ற சாதி அடிப்படையிலான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்போதும் கூட, 2022-இல் காவல்துறையில் நிலுவையில் உள்ள 51 வழக்குகளில், முந்தைய ஆண்டு களை உள்ளடக்கிய, 12 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. வன்கொடுமை குற்ற வழக்குகள் அதிகரிப்பு தீண்டாமை வழக்குகள் குறைந்துள்ள போதிலும், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள் ளது. 2022-இல் 62,501 வழக்குகள் பதிவாகியுள் ளன. இச்சட்டத்தின் கீழ் காவல்துறையில் 17,000க்கும் மேற்பட்ட வழக்குகளும், நீதிமன்றங் களில் 2.33 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (பிசிஆர்) 1955 என்பது தீண்டாமை யை ஒழிக்கவும், எந்த வடிவத்தில் தீண்டாமை இருந்தாலும் அதன் நடைமுறையைத் தடுக்கவும் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். தீண்டாமையின் அடிப்படையில் எழும் எந்தவொரு பிரச்சனைக்கும் இந்த சட்டம் தண்டனையை விதிக்கிறது. தீண்டாமை (குற்றங்கள்) சட்டம், 1955 என்று அழைக்கப்பட்ட இந்தச் சட்டம், 1976-இல் திருத்தப்பட்டு மறுபெயரிடப்பட்டது. 21 மாநிலங்களில் 19 ஆயிரம் கலப்புத் திருமணங்கள் 2022 அறிக்கை, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18 ஆயிரத்து 936 கலப்பு - சாதி திருமணமான தம்பதிகளுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் தலா ரூ. 2.5 லட்சம் நிதிச் சலுகைகள் வழங்கப்பட்டதாக வும் குறிப்பிட்டது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,100 பயனாளிகள் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து கர்நாடகா (3,519) மற்றும் தமிழ்நாடு (2,217) மாநிலங்கள் உள்ளன. பிசிஆர் சட்டம், சமூக மற்றும் மதத் துறைகள் உட்பட, தீண்டாமையின் பல்வேறு வெளிப்பாடு களுக்கான தண்டனைகளை வரையறுத்து பரிந்துரைப்ப தை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்குக் பதிவு, காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, சிறப்பு நீதிமன்றங் கள் மற்றும் காவல் நிலையங்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்தப்பட்ட சாதி-கலப்பு திருமண ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வருடாந்திர மறுஆய்வு அறிக்கையை இது கட்டாயமாக்குகிறது. அறிக்கை கூட தராத உ.பி., பீகார் மாநிலங்கள்! பல மாநிலங்கள் அவ்வாறு செய்யத் தயங்கி வருகின்றன. பீகார், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலப்புத் திருமண ஊக்கத்தொகை குறித்த தகவல்களை வழங்கவில்லை. கூடுதலாக, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகியவை பிசிஆர் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ‘எந்த’ தகவலையும் சமர்ப்பிக்கவில்லை.