tamilnadu

img

திருப்பூர் மோட்டார், ஆட்டோ தொழிலாளர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

 திருப்பூர், ஏப்.17- திருப்பூர் மாவட்டத்தில் வேலையின்றி தவித்துவரும் மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குமாறு சிஐடியு சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து திருப்பூர் மாவட்ட மோட்டார் & ஆட்டோ லேபர் யூனியன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் விஸ்வநாதன், சுகுமாறன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒய்.அன்பு, சிவராமன் ஆகியோர் வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: கொரனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. அரசு உத்தரவையும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதே நேரத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் மிகக் கடுமையான வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது தமிழக அரசு நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்து இருக்கிறது.

மற்ற தொழிலாளர்களின் நிலைமையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்விழந்து நிர்க்கதியாக நிற்கும் ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நிவாரணம் வழங்கவேண்டும். இந்நிலையில் அரசு அறிவித்த நிவாரணத்தை வாங்குவதற்கு வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் நேரடியாக வர வேண்டாம் எனவும், தொழிலாளர் துணை ஆணையர் இ மெயில் அல்லது வாட்சாப்க்கு ஆவணத்தை அனுப்பும்படி அரசு சொன்னது. அதன்படி இந்த தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனுப்பி விட்டனர். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு தொழிலாளர்களுக்கும் வங்கியில்  பணம் ஏறவில்லை என்ற தகவல்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஆட்டோ தொழிலாளர் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். சாப்பாடுக்கே வழியில்லாமல் பட்டினிச் சாவை நோக்கி சாகும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே  நிவாரணம் சீக்கிரமாக கிடைப்பதற்கு தொழிலாளர்களின் நிலைமையை கருதி தொழிலாளர் துணை ஆனையரிடம் மிக விரைவாக நிவாரணம் கிடைத்திட  ஆவன செய்யும்மாறு சிஐடியு  கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேலையில்  நலவாரியத்தில் பதிவு செய்யாத  ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு  செய்யப்பட்ட ஆட்டோ பர்மிட் அடிப்படையில் மற்றும் அரசாங்கத்தால் பேட்ஜ் வழங்கப்பட்ட ஓட்டுனர்களுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் மன சாட்சியின் அடிப்படையில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஆவன செய்யுமாறு திருப்பூர் மாவட்ட  அனைத்து ஆட்டோ & மோட்டார் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு  சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளன.