tamilnadu

img

தையல் கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஏப். 30 – கொரோனா ஊரடங்கு அமலாகி இருக்கும் நிலையில் வேலையிழந்து தவிக்கும் தையல் கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்குமாறு திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.
திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சி.மூர்த்தி இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம், ஆட்டோ, சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு  நிவாரண நிதியாக, ரூபாய் 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுபோன்று தமிழ்நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும் பகுதி பெண்கள் ஆகும். அதிலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைப் பெண்கள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோர்தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வாரியத்தில் பதிவு செய்த, தையல் கலைஞர்களுக்கும், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச்சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கொரனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்கவும், மேலும் இலவச பள்ளி சீருடை 2019ஆம் ஆண்டுக்கு தைத்த  4 - செட் துணிக்கான கூலியும் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அந்த கூலியையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் சி.மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.