புதுக்கோட்டை:
ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு ரூ.1400-க்கான அரசாணையை திருத்தம் செய்து உத்தரவு வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் நா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு கடந்த ஆட்சியின் போது ரூ.2,600 உடன் கூடுதலாக ரூ.1,400 சேர்த்து ரூ.4,000 என ஊதிய உயர்வுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. பல தொழிலாளர்கள் தற்பொழுது ரூ.5,000 வரை சம்பளம் பெற்று வரும் நிலையில் இந்த அரசாணை மூலம் சம்பளம் ரூ.4,000-ஆக குறைக்கப்படுகிறது. எனவே, இந்த குளறுபடிகளைப் போக்கும் வகையில் தற்பொழுது வாங்கும் சம்பளத்தைவிட கூடுதலாக ரூ.1,400 என திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, காண்ட்ராக்ட், சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தம் செய்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு தூய்மைப் பணியில் ஈடு
பட்ட தொழிலாளர்கள், ஒஎச்டி ஆபரேட்டர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம், சிகிச்சை பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் பணியாளர்களை தூய்மைப்பணியில் நியமிக்க வேண்டும். தூய்மை பணியில் தள்ளுவண்டிகளை ஒழித்து பேட்டரி வண்டிகள், பவர் டிரில்லர்களை வழங்க வேண்டும். தூய்மைப்பணி யாளர்களுக்கு வேலை செய்யும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.