tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலை நடத்தி சாலைகளை செப்பனிடுக திருப்பூர் சிஐடியு மோட்டார் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், மே 30 -தமிழகத்தில் உள்ளாட்சித்  தேர்தலை நடத்தி முடித்து சீர்குலைந்து கிடக்கும் சாலைகளைச் செப்பனிட்டு வாகன விபத்துகள் நடைபெறுவதை குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொல்ஸ் லேபர் யூனியன் மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொபைல்ஸ் லேபர் யூனியனின் 11ஆவது மாநாடு வியாழக்கிழமை சிஐடியு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் பி.செல்லத்துரை மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். இம்மாநாட்டில் மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு அறிக்கை சமர்ப்பித்தார். அன்றாட விலைநிர்ணயிக்கும் பெட்ரோல், டீசல் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்துவதுடன், அவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்புக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டண அபரிமித உயர்வை குறைக்க வேண்டும். திருப்பூர் வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்பி தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தி பழுதடைந்து சீர்குலைந்து கிடக்கும் சாலைகளைச் செப்பனிட்டு வாகன விபத்துகளை தடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பங்களை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். காவல் துறையும், போக்குவரத்து காவல் துறையும் வாகன சோதனை என்ற பெயரில் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டப் பொருளாளர் சி.அருண், துணைத் தலைவர்கள் எல்.தண்டபாணி, சுதா சுப்பிரமணியம், ஜெ.ரமேஷ், துணைச் செயலாளர்கள் எம்.பாலு, டி.சரவணன், சம்பத் ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்கள் 16 பேர், சிறப்பு அழைப்பாளர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இம்மாநாட்டில் சுமார் 120 பேர் பங்கேற்றனர். நிறைவாக சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். சங்கப் பொருளாளர் சி.அருண் நன்றி கூறினார்.