அவிநாசி ஏப்.15 அவிநாசி ஒன்றியங்களில் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதுடன், வழக்குப் பதியப்படும் என மிரட்டிய தேர்தல் அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஆ ராசாவுக்கு ஆதரவாக ஞாயிறன்று அவிநாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில பொருளாளர் ஆறுமுகம் , பெரியசாமி தலைமையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் துவங்கியபோது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், வாகனத்தில் கட்டிய கொடிகளை அகற்றுமாறும், வாகனத்தில் ஆட்கள் செல்லக்கூடாது , மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவிநாசி தாலுகாஅலுவலகம் முன்பு பிரச்சாரம் செய்தபோதும், பிரச்சாரத்தை தடுக்க முற்பட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்ற தேர்தல் அதிகாரிகளை கண்டித்ததுடன், இது ஆரோக்கியமான போக்கல்ல என்று தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். அப்போது, வண்டியில் செல்லும்போது தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். நின்று ஓரிடத்தில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.