சென்னை, மே 10- அரசு மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம் மாதம் 7 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம், கீரப்பாளையத் தில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றுள்ளனர். இதில் சமூக இடைவெளி கடைபித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் மீறப்படவில்லை. இருப்பினும் அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கத்துடன் அவர் மீது வழக்குப் போட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ளஅடிப்படை ஜனநாயக உரிமைகளின்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி உட்பட பலர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.