விண்வெளியில் மாரத்தான் ஓடிய வீராங்கனை
வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் போற்றி பாராட்டப்பட்டவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். அமெரிக்க நாட்டில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் தான் வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளியில் 322 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சாதனையாளர். 2024 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி புட்ச் வில்மோர் என்பவரோடு இணைந்து விண்வெளிக்கு பயணித்தார் சுனிதா வில்லியம்ஸ். அவர் பயணித்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு 9 மாதங்களுக்குப் பின்பு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி தான் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 9 மிஷின் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக அவர் கொண்டுவரப்பட்டார். ஒன்பது மாத கால இடைவெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை விண்வெளியில் அவரது சக விஞ்ஞானியான புட்ச் வில்மோருடன் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி நடை பயிற்சி, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலைய பராமரிப்பு பணி இது போன்ற பல்வேறு பணிகளில் விண்வெளியில் தங்கி இருந்த நாட்களை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். விண்வெளி பயணத்தில் 682 ஆண்களும் 100 பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். முதன் முதலாக வாலண்டினா சோவியத் யூனியன் சார்பாக 1963 ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் ஆவார். அது போன்று இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணித்த முதல் பெண் என்ற பெருமை கல்பனா சாவ்லாவுக்கு தான் சேரும். மூன்று முறை விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட பெருமைக்குரியவர் சுனிதா வில்லியம்ஸ். 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் ஓடும் இயந்திரத்தில் ஒரு மாரத்தான் ஓட்டத்தை நிகழ்த்தி காட்டியவர். விண்வெளியில் மரத்தான் ஓடிய முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். நிறைய வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கும் புத்தகங்களை எடுத்துச் சென்று படித்த சாதனையை யும் படைத்துள்ளார் என்பது அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரது சாதனைகளுக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இதுபோன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய நூல் இது. நூலாசிரியர் முனைவர் ஆயிஷா இரா நடராஜன் மிக அருமையாக இந்நூலை நமக்கு வழங்கி உள்ளார். மிகச்சிறிய நூலாக இருந்தாலும் மிகப்பெரிய விஷயங்களை நமக்கு வழங்கி உள்ளது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நூலை வாசிப்பதன் மூலம் ஒவ்வொருவரும் விண்வெளி பயணம் மேற்கொண்ட அனுபவத்தை பெற முடியும் என்பதை உறுதியாக கூற முடியும். பள்ளி குழந்தைகளுக்கு விண்வெளிப் பயணம், விண்வெளியை குறித்த மிக கூடுதலான தகவல் களை பெற்றுக்கொள்ள இந்த நூல் வழிவகை செய்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. வாசிப்போம் மகிழ்வோம்.