அவிநாசி, மே 21-சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதை விளக்கி செவ்வாயன்று அவிநாசியில் துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெற்ற ஊழியருக்கான ஊதியம் ரூ.5,700 இருந்து ரூ.20 ஆயிரத்து 600 வழங்கவேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிதி ஊதியம் வழங்குவதை கைவிட்டு அரசு பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 13 ஆண்டுகாலமாக பணி வழங்கப்படவில்லை, இதற்கு தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர், பழனி ஆகிய மாநில, மாவட்ட நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணி தனியார் நிறுவனத்தினருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும். மேலும் இப்பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மே.28ந் தேதி காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழ்நாடு நெஞ்சாலை துறை சாலை பணியாளர்கள்சங்கத்தினர் அவிநாசியை அடுத்த வெள்ளிபாளையத்தில் தொழிலாளர்களை சந்தித்து துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சங்க நிர்வாகி ராமன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.